
வேலூர்: சென்னையில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற ரூ.14.71 கோடி ஹவாலா பணத்தை பள்ளிகொண்டா போலீஸார் பறிமுதல் செய்ததுடன் 4 பேரை கைது செய்தனர். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா போலீஸார் நேற்று முன்தினம் இரவு சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோவிந்தம்பாடி நெடுஞ்சாலையொட்டி கேரள மாநிலபதிவெண் கொண்ட லாரியில்,காரில் வந்தவர்கள் கொடுத்தபெரிய பைகளை மாற்றிக்கொண்டிருந்தனர். இதைப்பார்த்து, சந்தேகம் அடைந்த காவலர்கள் அவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர்.
பார்சலை சோதனையிட்டதில் கட்டு கட்டாகப் பணம் இருந்தது. இதையடுத்து பணப்பைகளுடன் 4 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்துவிசாரித்தனர். இதில் சென்னையைச் சேர்ந்த நிசார் அஹமத், அவரது உறவினரான மதுரையைச் சேர்ந்த வாசிம் அக்ரம் மற்றும் கேரள மாநிலம் கோழிக்கோடுவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் சர்புதீன், நாசர் என்பது தெரியவந்தது. சென்னையில் இருந்து கேரளாவுக்கு கருப்புப் பணத்தை எடுத்துச் செல்வதாகவும் பெரிய இடத்து விவகாரம் என்றும் அவர்கள் கூறியதாகவும் யாரிடம் இருந்து யாருக்காக பணம் கொண்டு செல்லப்படுகிறது என்ற தகவலை தெரிவிக்கவில்லை என்றும் போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments