Advertisement

காஞ்சிபுரம்: 8 பெண்கள் நிலை என்னவானது? - விடிய விடிய தனியார் நிறுவன ஊழியர்கள் போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ஸ்ரீ பெரும்புதூர், சுங்குவார்சத்திரம், இருங்காட்டுகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள், கெமிக்கல் தொழிற்சாலைகள், செல்போன் மற்றும் லேப்டாப் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அதிகளவு தொழிற்சாலைகள் இப்பகுதியில் இருப்பதால், அருகில் இருக்கும் மாவட்டங்கள் மட்டுமின்றி தென் மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவு ஆண்கள் மற்றும் பெண்கள் இந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர். இதனால் பல தொழிற்சாலைகள் தங்களுடைய ஊழியர்களை தங்கள் சொந்த விடுதிகளில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்துள்ளது. அங்கு உணவுகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தருவது உண்டு. இதற்காக ஊழியர்களிடம் குறிப்பிட்ட தொகையை அந்த தொழிற்சாலை மாதம் தோறும் தொழிலாளர்கள் சம்பளத்திலிருந்து பிடித்துக் கொள்ளும். இந்த நடைமுறை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.
image
அந்த வகையில் ஸ்ரீ பெரும்புதூர் பகுதியில் செயல்படும் தனியார் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் சுமார் 5000 க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிகின்றனர். இவர்கள், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பூந்தமல்லியில் உள்ள பகுதியில் அமைந்துள்ள விடுதியில் தங்கி பணி செய்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், தென் மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்நிலையில் கடந்த புதன்கிழமை விடுதியில் தயாரிக்கப்பட்ட உணவினால் பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு உள்ளது. 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு உடல் நலக் குறைவால் அருகிலிருந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். பெரும்பாலானோர் இரண்டு நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 பெண்கள் திரும்பவில்லை என்றும், அவர்கள் குறித்த நிலையை சம்பந்தப்பட்ட விடுதி நிர்வாகம் தெரிவிக்காமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் குறித்து நிர்வாகத்திடம் சக ஊழியர்கள் கேள்வி எழுப்பியபோது மழுப்பலான பதில்களை தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிறகும் நிர்வாகம் முறையான தகவல் தெரிவிக்காததால், எட்டு நபர்கள் உயிரிழந்து இருப்பார்களா என்று சந்தேகம் எழுந்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.
image
இதனையடுத்து சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் விடுதியில் இருந்த பெண் ஊழியர்கள் அனைவரும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவில் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையிலான காவலர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையை தொடர்பு கொண்டு கேட்கும்போது, “பெண் தொழிலாளர்கள் உயிரிழந்ததாக கூறப்படுவது முற்றிலும் வதந்தி. யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. அனைவரும் தற்போது சிகிச்சை முடிந்த பின்பு நலமாக இருக்கிறார்கள். தற்போது சாலை மறியலில் ஈடுபட்ட இருக்கக்கூடிய தொழிலாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம், விரைவில் அனைவரும் கலைந்து செல்வார்கள். தவறு செய்தது யாராக இருந்தாலும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தனர். 
- காஞ்சிபுரம் பிரசன்னா

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments