
''திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக உறுதியாக நிறைவேற்றப்படும்'' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேளாண்மைக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின் முதலமைச்சர் ஏற்புரையாற்றினார். அப்போது, திமுக ஆட்சி நூறு நாள்களைக் கடந்ததற்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். ''வாழ்த்த மனமில்லாதவர்களின் வாழ்த்தையும் பெறும் வகையில் இரு மடங்காக உழைப்போம். திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக உறுதியாக நிறைவேற்றப்படும்'' என்று ஸ்டாலின் கூறினார்.

இதனைத்தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று 100-வது நாளை எட்டியுள்ள நிலையில், சென்னை கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்முறையாக வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை முன்னிட்டு, கருணாநிதியின் நினைவிடம் பல்வேறு வகையான காய்கறிகளாலும் மலர்களாலும் அலங்காரமும் செய்யப்பட்டு இருந்தது.
அதில் ' 100 நாள் ஆட்சி மக்கள் மகிழ்ச்சி' என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. கருணாநிதி நினைவிடத்தை சுற்றி வந்து மலர் தூவி மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின், அண்ணா நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார். அமைச்சர்களும், திமுக எம்எல்ஏக்களும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments