
'உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன் என்று சொல்ல தலைநிமிர்ந்து வருகிறேன்' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.
மறைந்த திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, தமிழக முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் 'தலைநிமிர்ந்து வருகிறேன்' என்ற தலைப்பில், தனது குரலில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''
''திருவாரூரில் கருவாகி தமிழகத்தையே தனது ஊராக்கிய தலைவர்களுக்கெல்லாம் தலைவர்; முதல்வர்களுக்கெல்லாம் முதல்வர். முத்தமிழ் கலைஞர் அவர்களே, இன்று ஜூன் 3 உங்கள் பிறந்தநாள் மட்டுமல்ல, உயிரினும் மேலான கோடிக்கணக்கான உடன்பிறப்புகள் அனைவரும் புத்துணர்ச்சி பெற்ற நாள். அதனால்தான் கழகத்தின் கண்மணிகளாம் கருப்பு சிவப்பு தொண்டர்கள் அனைவருக்கும் தனித்தனி பிறந்த நாட்கள் இல்லை. எல்லோருக்கும் பிறந்தநாள் இந்த ஜூன் 3.
வங்கக் கடலோரம் வாஞ்சைமிகு தென்றலின் தமிழ் தாலாட்டில் உங்கள் கண்ணான அண்ணனாம் பேரறிஞருக்கு பக்கத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் எனது ஆரூயிர் தலைவரே, இந்த ஜூன் 3 நான் கம்பீரமாக வருகிறேன். உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன் என்று சொல்ல தலைநிமிர்ந்து வருகிறேன்.

நீங்கள் மறையவில்லை. மறைந்திருந்து என்னை கவனிப்பதாகத்தான் எப்போதும் நினைப்பேன். கோட்டையை கைப்பற்றிய அடுத்த நாளே கொரோனாவை விரட்ட போராடிக் கொண்டிருக்கிறோம். உழைப்பு உழைப்பு உழைப்பு என்று நீங்கள் உருவகப்படுத்தினீர்கள். அதற்கு உண்மையாக இருக்கவே உழைத்துக் கொண்டிருக்கிறேன்.
உங்கள் சொல் எனக்கு சாசனம்; உங்கள் வாழ்க்கை எனக்கு பாடம்; உங்கள் பாராட்டே எனக்கு உயிர்விசை; உங்கள் குரலே எனக்கு தேனிசை. உங்களது வார்ப்பான நான் இந்த ஜூன் 3, உங்களை வெற்றிச் செய்தியோடு சந்திக்க வருகிறேன். வாழ்த்துகள் ஸ்டாலின் என்று சொல்வீர்களா தலைவரே?'' என்று அந்த வீடியோவில் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
தலைநிமிர்ந்து வருகிறேன்! #KalaignarForever https://t.co/4HzvtEGo5u
— M.K.Stalin (@mkstalin) June 3, 2021
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments